தலவரலாறு
காவிரி படுகையில் வாழ்ந்து அரசருக்கு உறுதுணையாய் நின்ற செட்டியார்கள் 17ஆம் நூற்றாண்டில் மராட்டியர்களின் படையெடுப்பின் பொழுது நாயக்க மன்னர்களுக்கு படை, பொருள், குதிரை, யானை, போர் கருவிகள், என பல உதவிகள் செய்ததால், மராட்டியர்களுக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது. தமிழ் நாட்டின் ஆட்சியை பிடித்த மராட்டியர்களின் கோபத்தினால் செட்டியார்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆண் செட்டிகளை சிரச் சேதம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. குலம் தழைக்க, மூத்த அப்பச்சியின் யோசனைப்படி, இருபத்தேழு குலத்திலிருந்து, 500 இளம் தம்பதிகளை (பால்ய விவாகம் செய்வித்து) முதலில் காடாம்பாடியில் ஒரு புலவரின் பொறுப்பில் தங்கி, பின்னர் சரியான சமயத்தில் அவரின் ஒத்துழைப்போடு இரகசியமாய் சங்ககிரி நாயக்க மன்னர்களுக்குட்பட்ட பகுதிக்கு குடியமர்த்திய பொழுது அனைவரும் ஓரிடத்தில் வசிக்காமல், ஒடையாக்கவுண்டன் பாளையம், மாக்கினாங்கோம்பை, திருச்செங்கோடு, ஈரோடு, கோபி, பவானி, சங்ககிரி, நாமக்கல், ஒட்டன் சத்திரம், தாராபுரம், சுற்றுப்புற பகுதிகளில் பிரிந்தனர். இதனால் இக்குடும்பங்கள் ஐநூற்று செட்டிமார் எனவும், கொங்கு பகுதியில் குடிஅமர்த்தப் பட்டதால் காடாம்பாடி ஐநூற்று வகை கொங்கு செட்டியார் எனவும் அழைக்கப் பெற்றனர் .பிற்காலத்தில், இக்குடும்பங்கள் பிழைப்புக்காக ஊர் மாறி மேலும் பல கிளைகளாகவும் பிரிந்து, புதிய குலங்களை உருவாக்கியுள்ளனர்.
செட்டிமார்கள் சிறந்த சிவ பக்தர்கள். கொங்கு பகுதியில் உள்ள பெரும்பாலான சிவன் கோயில்கள் செட்டியார்களின் பொருளுதவியினாலேயே கட்டப்பட்டது. இவர்களில் ஒரு பகுதியினர் செட்டியார் குட்டை எனும் பகுதியில் ( தற்பொழுது சேலம் மாவட்டம் சங்ககிரிக்கும் எடப்பாடிக்கும் இடையில் வேலம்மா வலசு அருகில்) தங்கி விவசாயம் மற்றும் வியாபாரம் செய்தனர்.
அவர்களின் குடும்பத்திற்காக அருகிலேயே சிவன் கோயிலையும் கட்டினர். இச்சமயத்தில் சங்ககிரி நாயக்க மன்னர்களும் மராட்டியர்களின் ஆட்சிக்கு அடி பணிந்தனர். மராட்டியர்களுடன் சமரசம் செய்துகொள்ள செட்டிமார்கள் வழி தேடினர்.
மராட்டியர்களின் குலதெய்வம் சிவன். சல்சட்டே என்று அழைக்கப்பட்ட (பம்பாய் நகரம்) மராட்டிய தேச மன்னரால் , தட்சிண திராவிட நாடுகள் எல்லாம் மீண்டும் மராட்டியர் வசம் வந்ததை கொண்டாடும் வகையில்,பம்பாய் அருகிலுள்ள தானே எனும் ஊரில் உள்ள கோப்பிணேஸ்வரர் கோயில், 1760 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
அந்த ஈஸ்வரன் பெயரையே செட்டியார்களின் புதிய கோயிலின் சிவபெருமானுக்கும் வைத்து வணங்கினர். இறைவிக்கு அங்கயற்கண்ணி என பெயரிட்டனர். ஈசன் எப்பெயரில் இருந்தாலும் ஈசனே. பக்தர்களை காத்து நிற்பதில் முதன்மையான கடவுளல்லவா?. ஈசன் மராட்டிய மன்னரின் கனவில் தோன்றி தான் செட்டியார் குட்டையில் எழுந்தருளியிருப்பதாகவும், தன்னருளால் இந்நாட்டு மக்கள் விவசாயம் செழித்து, பசி, பட்டினி இன்றி, குலம் தழைத்து, உடல் பிணியின்றி, நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் எனச் சொல்லி மறைந்தார். தூக்கம் கலைந்த மன்னர், அரண்மனையிலிருந்து உடனே செட்டிகுட்டை சென்று, ஈசனை வழிபட்டு, செட்டியார்களுக்கு அனைத்து உதவிகளும் செய்தார்.
மூத்த அப்பச்சியின் யோசனைப்படி, பால்ய விவாகம் செய்விக்கப்பட்ட இளம் தம்பதிகளில் ஒரு ருது அடையாத கன்னி பெண், விளையாட்டு பருவத்தில் விளையாடாமல், குடும்பம் நடத்த இவ்வாறு அலைக்கழிக்கப் பட்ட பொழுது பாதிக்கப்பட்டு விளையாட்டாய் மூத்த அப்பச்சியின் மேல் கோபம் கொண்டு அவர் நோக்கம் தவறி குலத்தில் ஆண் வாரிசுகள் குறைய சாபம் கொடுத்தாள். பெண் சாபம் பொல்லாதது. சாப நிவர்த்தி பெற பெண்களுக்கு முக்கியத்துவமும், வீடு, தொழில், வியாபார விஷயங்களில் பெண்களையும் கலந்தாலோசிக்கவும், பெண்களின் சம்மதத்துடன் முடிவுகளை செயல்படுத்தவும், மற்றும், ஸப்த கன்னிமார் வழிபாடும் செய்தால் சாபம் விலகும் என்றும் அறியப்பட்டது. இதன்படி, பெண் தெய்வமான அன்னை அங்கயற்கண்ணி மற்றும் ஸப்த கன்னிமார் வழிபாடு முக்கியத்துவம் பெற்று, காலம் காலமாக நடைபெறுகிறது.
பெண்மைக்கு முக்கியத்துவம் : அன்னை அங்கயற்கண்ணி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலித்தார். சுவாமி கோப்பிணேஸ்வரர் கருவறை யில் சுயம்புலிங்கமாக வீற்றிருந்தார். கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக இருந்தன. செட்டியார் குள தீர்த்தம் இத்தலத்திற்கு சிறப்பு. இத்தலத்தை பொறுத்தவரை பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகை யில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருந்தார்.
அங்கயற்கண்ணி: இங்குள்ள அம்மனின் பெயர் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.
மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார். அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.

