அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். மலேசியா.
ஆலய வரலாறு.
மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், ஆயிர வைசியர் செட்டியார் சமூகத்தினரால் கட்டப்பட்டதாகும். மலேசிய நாட்டில் இரும்பு, சாக்கு, பாட்டில்களை மறு சுழற்சி செய்து விற்பனை செய்து வந்த இவர்கள் பாட்டில் செட்டியார்கள் என அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து வந்த மஞ்சபுத்தூர் செட்டியார் 1830ம் ஆண்டு பெனாங்கிற்கு முதல் முறையாக வந்த இவர்கள் விக்டோரியா தெரு, அமெரிக்கன் தெரு, அச்சீன் தெரு, பீச் தெரு ஆகிய இடங்களில் குடியேறினர். 1920ம் ஆண்டு நமது சமூகத்திற்கென சங்கம் அமைத்து, நிதி திரட்டி, இடம் வாங்கி வழிபாட்டு கட்டிடம் அமைத்தனர். 5000 சதுர அடிப்பரப்பிளவில் முதலில் ஆயிர வைசிய மடாலயம் கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆண்டு தோறும் வருடப் பிறப்பு, திருக்கார்த்திகை, தை பூசம் ஆகிய திருவிழாக்களை மிகச் சிறப்பாக இவ்வாலயத்தினர் நடத்தி அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.
1952ம் ஆண்டு முதல் ஐம்பொன்னாலான முருகனை வைத்து காலை, உச்சி காலம், மாலை ஆகிய மூன்று நேர பூஜைகளை செய்து வந்திருக்கின்றனர்.
1989ம் ஆண்டு ஆயிர வைசிய மெய்யன்பர்கள் கூடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும், திருக்கல்யாண மண்டபமும் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
1989ம் ஆண்டு நிறைவு பெற்ற இக்கோயிலில் சுந்தரேஸ்வரர் உடனுறை மீனாட்சி அம்மன் முக்கிய தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
திருப்பணிக் குழுவினர் திரு.சி.சந்திரன் செட்டியார் தலைமையில் இயங்கி திருப்பணி நிறைவு பெற்று ஈஸ்வர ஆண்டு தை திங்கள் 27-ம் நாள் (9-2-1998) திங்கட்கிழமை காலை மணி 11:08க்கு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
அன்று முதல் இந்த ஆலயத்தில் ஏனைய விழாக்களோடு மீனாட்சி திருக்கல்யாண வைபோக விழாவும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது.
தமிழகத்தின் மதுரையில் உள்ள மீனாட்சியின் திருக்கோயிலை ஒத்த வகையிலேயே இக்கோயிலை அமைத்திருக்கின்றனர். எப்போதும் சிவனுக்கு இடப்புறம் வைக்கப்படும் சக்திக்கு மாறாக மீனாட்சியின் இடது புரத்தில் சோமசுந்தரக் கடவுள் இருக்கின்றார்.
மீனாட்சிக்கு இங்கு ரிஷப வாகனமும் உண்டு. மதுரை மீனாட்சி கோயிலைப் போன்று முக்குருணிப் பிள்ளையார், சரஸ்வதி, வெங்கடாசலபதி , பைரவர், இலட்சுமி, அனுமார், முருகன், ஐயப்பன், ஆகிய தெய்வங்களோடு மதுரைக் கோயிலிலுள்ள கல்யானை கதையை பிரதிபலிக்கும் காட்சியை இங்கும் அமைத்திருக்கின்றனர்.
இக்கோயிலில் ஒரு நாகலிங்கப்பூ மரம் ஒன்றும் உள்ளது. பினாங்கின் கெபூன் பூங்கா பகுதியில் இருக்கும் இம்மீனாட்சி அம்பிகை இத்தீவு மக்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றார். மலேசியா சென்று வருபவர்கள் இக்கோயிலுக்கும் சென்று இதன் அமைப்பு, கோயிலின் வலது பக்கத்தில் அமைந்திருக்கும் திருக்கல்யாண மண்டபம், இவ்வாலயம் அமைந்திருக்கும் ரம்மியமான சூழல் ஆகியவற்றை பார்த்து ரசித்து வர வேண்டும்.
ஆலய முகவரி :
ஆயிரவைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
முகவரி: 49, கெபுன் பூங்கா, பினாங்கு.
தொடர்பு தொலைபேசி எண்: +60 4 2776250
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக